நாளை சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்திட எங்கும் தடைவிதிக்கவில்லை. அவதூறான பொய்ச்செய்திக்கு மறுப்பு தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம். திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட 1,270 திருக்கோயில்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23-ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk